இலங்கை மக்களுக்காக ஜேர்மனிய சுற்றுலா பயணிகள் அசத்தல் கண்டுபிடிப்பு
ஜேர்மனியில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்த வெளிநாட்டவர் புதுவகையான முச்சக்கர வண்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
குறித்த நபர் மின்சார பேட்டரி மூலம் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை உருவாக்கியுள்ளார்.
ஜேர்மன் வடிவமைப்பாளரான ரிக்கோ, கண்டியில் உள்ள குண்டசாலை பொலிஸ் குடியிருப்பு வளாகத்தில் வாடகை அடிப்படையில் தங்கியுள்ளார்.
புதிய கண்டுபிடிப்பு
அவர் கண்டுபிடித்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 கிலோ மீற்றர் தூரம் வரை முச்சக்கர வண்டியில் பயணிக்க முடியும். அதன் பின்னர் மின்சாரம் உள்ள இடத்தில் மீண்டும் சார்ஜ் செய்து பயணிக்க முடியும் என அதனை கண்டுபிடித்த ஜேர்மனி நாட்டவர் ரிகோ தெரிவித்துள்ளார்.
அவர் தனது 18வது வயதில் இயந்திர தொழில்நுட்ப வல்லுனராகவும், பந்தய கார் மெக்கானிக்காகவும், செயற்பட்டுள்ளார். அதன் பின்னர் ரேஸ் கார் பிரிவின் பொறியாளராகவும், formula மற்றும் GT கார்களில் தொழில்துறை பொறியாளராகவும் சுமார் 25 வருட அனுபவத்துடன் தொழில்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.
எரிபொருள் தேவையில்லாத முச்சக்கர வண்டி
எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் வரிசையில் நிற்பதை தான் பார்த்ததாகவும், முச்சக்கர வண்டிகளுக்கு இந்த முறையைப் பயன்படுத்தினால் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், நச்சு வாயுக்கள் சுற்றுச்சூழலில் பரவுவதை தடுக்க முடியும் என ரிகோ தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் இருந்தே தான் நேசிக்கும் இலங்கைக்கு உதவ முடிந்ததமையானது தனது வாழ்க்கையில் தான் பெற்ற மிகப்பெரிய மகிழ்ச்சி எனவும் இந்த புதிய கண்டுபிடிப்பை மேலும் மேம்பட்ட நிலையில் மேற்கொள்ள அரசாங்கத்திற்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.