தமது மண்ணில் கொலை முயற்சி : முதல் தடவையாக இந்திய அதிகாரியின் பெயரை வெளியிட்ட அமெரிக்கா
அமெரிக்க குடியுரிமைகளை கொண்ட காலிஸ்தான் சார்பு பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் இந்திய அதிகாரியின் பெயரை, அமெரிக்கா முதல் தடவையாக வெளியிட்டுள்ளது.
இதுவரை சிசி-1 என்ற அடையாளத்தினால் அவரின் பெயரை குறிப்பிட்டு வந்த, அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம், அந்த அதிகாரியின் பெயரை முதல் தடவையாக வெளியிட்டுள்ளது.
இந்திய உளவுத்துறை அதிகாரியாகக் கருதப்படும் விகாஸ் யாதவ் என்பவர் மீதே கூலிக்குக் கொலை மற்றும் பணமோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விகாஸ் யாதவ் தலைமறைவு
இந்த கொலை சதியை வெளிக்கொணரும் குற்றச்சாட்டை முதலில் தாக்கல் செய்து சுமார் 11 மாதங்களுக்குப் பின்னரே, நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க சட்டவாதிகள், யாதவ் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
ஏற்கனவே, யாதவின் இணை சதிகாரராகக் கூறப்படும் நிகில் குப்தா, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் விகாஸ் யாதவ் தலைமறைவாகியிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.யாதவ் இந்தியாவில் வசிக்கிறார்.
அத்துடன் அவர் இந்திய பிரதமர் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்திய அமைச்சரவை செயலகத்தில் பணிபுரிந்தவர் என்று சட்டமா அதிபர் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
விகாஸ் யாதவ், இந்திய பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் உளவுத்துறையில் பொறுப்புகள் கொண்ட மூத்த கள அதிகாரியாவார் என்றும் அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர் இந்தியாவில் இருந்தே, இந்த படுகொலை சதித்திட்டத்தை இயக்கினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விகாஸ் யாதவ், இந்திய அரசாங்கத்தின் பணியாளர் இல்லை என்று இந்திய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவைச் சேர்ந்த 39 வயதான யாதவ், மற்றும் 53வயதான குப்தா ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால். அவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |