தெற்கு தாய்லாந்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி
தெற்கு தாய்லாந்தின் நராத்தி வாட் மாகாணத்தில் உள்ள புகேதா சாமி பாதுகாப்புப் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 5 தாய்லாந்து இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(22.07.2026) இடம்பெற்ற நிலையில், மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்
கருப்பு நிற உடையில், பிக்கப் டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 10 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 45வது ரேஞ்சர் ரெஜிமென்ட் வீரர்கள் மீது பைக் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னர், அங்கிருந்த AK-47 ரக துப்பாக்கிகள், குண்டுதுளைக்காத சட்டைகள் மற்றும் மொபைல் போன்களைப் பறித்துக்கொண்டு அந்த கூட்டத்தினர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, தாய்லாந்து அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இது நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட தீவிரவாத அச்சுறுத்தல் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளைச் சீர்குலைக்கும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நராதிவாட் மாகாணத்தில் இடம்பெற்ற தாக்குதல்
இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.

நராதிவாட் மாகாணத்தில் நிலப்பகுதியில் கார்க் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாளே இந்தத் தீவிரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு தாய்லாந்து எல்லைப் பகுதிகளில், சமீப காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகின்றது.