கொழும்பு மெகசின் சிறைச்சாலை தாக்குதல்: சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் நபர் வெளியிட்டுள்ள தகவல்
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தாக்குதல் இடம்பெற்ற அன்று முதலில் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சம்பவத்தில் நேரில் பார்த்ததாக கூறப்படும் நபரொருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஒகஸ்ட் 6ஆம் திகதி இரவு கைதிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் நவோத் தில்ஷான் என்ற நபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் சம்பவம் இடம்பெற்ற போது மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கடுமையான தாக்குதல்
அவர் மேலும் தெரிவிக்கையில், அன்றைய தினம் கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இரவு 10 மணியளவில் பெருமளவிலான சிறைச்சாலை அதிகாரிகள் பூட்டப்பட்டிருந்த சிறைக் கதவுகளைப் பலவந்தமாக உடைத்து உள்ளே நுழைந்து, கைதிகளின் பெயர்களை அழைத்து, இரும்புக் கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கினர்.

பின்னர், அவர்கள் உட்பட மேலும் பல கைதிகள் சிறைச்சாலையின் பிரதான வாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கேயும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, வான் மூலம் சிறைச்சாலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.
வைத்தியசாலைக்குள்ளும் தாக்குதல்
எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், காயமடைந்த ஏனைய கைதிகளின் இரத்தத்தை உடலில் பூசிக் கொண்டு, இறந்தது போல் நடித்தேன். இதன் காரணத்தினாலேயே நான் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பினேன்.
சிறைச்சாலை வைத்தியசாலைக்குள்ளும் இத்தாக்குதல்கள் தொடர்ந்தது என குறிப்பிட்டுள்ளார்.