பெண் ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்
மாவட்ட செயலகத்தில் வேலை செய்வதாக கூறி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
பொருளாதார ரீதியில் உதவுவதாக குறித்த பெண்ணை நகர்பகுதிக்கு வரவழைத்து தகாத உறவுக்கு அழைத்த கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி மீது அப்பெண்ணும் பெண்ணின் கணவனும் இணைந்து வீதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதன்போது அவர் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொருளாதார ரீதியில் உதவி
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளான பொலிஸ் பரிசோதகர் கடமையாற்றிய காலத்தில் குறித்த பெண்ணின் கணவருக்கு நீதிமன்ற பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸ் பரிசோதகர் பெண்ணின் கணவர் அங்கு இல்லாததையடுத்து பெண்ணின் கையடக்க தோலைபேசி இலக்கத்தை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களின் பின்னர் பெண்ணின் தொலைபேசிக்கு தான் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி வருவதாகவும் பலருக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்துவருவதாகவும், உங்களுக்கு உதவி செய்துதருவதாக தெரிவித்த நிலையில் குறித்த பெண் தனது குடும்ப வறுமைகளை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நீண்டகாலமாக தொலைபேசி ஊடாக இருவரும் உரையாடி வந்த நிலையில் பொலிஸ் பரிசோதகர் குறித்த பெண்ணை தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தனது கணவருக்கு மனைவி தெரிவித்த நிலையில் சம்பவதினத்தன்று குறித்த பெண்ணும் கணவரும் பொலிஸ் அதிகாரி கூறிய இடத்திற்கு சென்றுள்ளனர்.

சந்திப்பின்போது, பொலிஸ் பரிசோதகரின் மோட்டர்சைக்கிள் திறப்பை பெண் கைப்பற்றியதாகவும், அவரின் கையை பிடித்து இழுத்ததையடுத்து அங்கு ஒளிந்திருந்த பெண்ணின் கணவன் சென்று குறித்த பொலிஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அவர் மீது கணவனும் மனைவியும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்த நிலையிலும், அவர்கள் அசமந்த போக்கினை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்று முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக பொலிஸ் பெண்கள் பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் பொலிஸ் பரிசோதகர் விட்டுவிட்டு ஓடிய மோட்டர் சைக்கிளை மீட்டதுடன் இது தொடர்பாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        