லெபனானில் மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல்: செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்
தெற்கு லெபனானின் பெய்ட் யஹூன் (Beit Yahoun) நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், லெபனான் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர் ஹசன் படாவி கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று(12.3.2026) நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, லெபனானில் மருத்துவ மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் இலக்கு வைக்கப்படுவது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு (ICRC) தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
மற்றவர்களின் உயிரைக் காக்கத் தங்களை அர்ப்பணிப்பவர்கள் கொல்லப்படுவது, அவர்களை நம்பியிருக்கும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என லெபனானுக்கான செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஆக்னஸ் தூர் தெரிவித்துள்ளார்.
கண்டனம்
உயிர்களைக் காப்பாற்றும் பணி, ஒரு உயிரைப் பலி கொள்வதாக அமையக்கூடாது என்றும், மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் எவ்வித இடையூறுமின்றி காயமடைந்தவர்களுக்கு உதவ அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர்கள் காயமடைந்தவர்களைச் சென்றடைவதற்கும், பாதுகாப்பாகத் திரும்புவதற்கும் அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் லெபனானில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.