அமெரிக்க தளங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல்: குவைத் பெரும் விலையைக் கொடுப்பதாக வெளியான தகவல்
ஈரானைத் தாக்குவதற்கு அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்ததன் விளைவாக குவைத் பெரும் விலையைக் கொடுத்து வருவதாக ஈரானிய அரசியல் ஆய்வாளர் ஃபோவாத் இசாதி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈரானை தாக்க அமெரிக்கா எடுத்துள்ள முயற்சி
ஈரான் தனது அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனை தன்னிச்சையாகவோ அல்லது எந்தக் காரணமும் இல்லாமலோ இலக்கு வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா இந்த நாடுகளின் நிலப்பரப்பைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், ஆனால் அந்த அண்டை நாடுகளால் தங்களின் எல்லையை அமெரிக்கா தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய மோதலின் ஆரம்ப நாட்களில் வெளியிடப்பட்ட அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ ஆதாரங்கள், குவைத் நிலப்பரப்பு ஈரான் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதை வெளிப்படையாக உறுதிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வீடியோவில் பாலைவனப் பகுதியிலிருந்து ஈரான் இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதைக் காண முடிந்ததாகவும், அந்தப் பாலைவனம் அமெரிக்காவின் அரிசோனா அல்லது நெவாடாவில் இல்லை, அது குவைத் நாட்டின் பாலைவனம் என்றும் இசாதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தத் தீவிரமான இராணுவப் பரிமாற்றங்களுக்கு விரைவில் ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டு, அமைதி திரும்ப வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.