முல்லைத்தீவில் நேர்ந்த கொடுமை - தாயை தேடி 200KM தூரம் சைக்கிளில் சென்ற சிறுவன்
நெடுங்கேணியில் இருந்து வாழைச்சேனை வரை 200 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்திற்கு சிறுவன் ஒருவர் சைக்கிளில் சென்றதாக கெபத்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்தியின் துன்புறுத்தல் தாங்க முடியாத 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு சென்றுள்ளார். முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனை பொலிஸ் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
வவுனியா கெபத்திகொல்லாவ பிரதான வீதியின் புளியங்குளம் காட்டுப் பகுதியில் சிறுவன் ஒருவர் சைக்கிளில் செல்வதை பிரதேசவாசிகள் கண்டதுடன் பிரதேசவாசிகளின் சந்தேகத்தின் அடிப்படையில் கெபத்திகொல்லாவ தலைமை பொலிஸ் பரிசோதகர் சமில ரத்நாயக்கவிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இந்த சிறுவனை பாதுகாப்பாக தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
சிறுவனுக்கு உணவு, பானங்கள் வழங்கியதுடன், பராமரிப்பையும் வழங்க நடவடிக்கை எடுத்ததை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், நெடுங்கேணி பிரதேசத்தில் வசிக்கும் சித்தியின் அன்றாட துன்புறுத்தல் மற்றும் தொல்லை தாங்க முடியாமல் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சைக்கிளில் பயணிக்க தீர்மானித்துள்ளதாக சிறுவன் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.