யாழில் சுகாதார அதிகாரியின் A.T.M மோசடி! பாடசாலையில் விசேட கலந்துரையாடல்
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் கண் பரிசோதனைக்காக சென்ற சுகாதார பரிசோதகர் ஒருவர் தன்னுடைய பெருந்தொகையான பணத்தை இழந்ததாக குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று அ.த.க பாடசாலைக்கு கண் பரிசோதனைக்காக சென்ற சுகாதார பரிசோதகர் அங்கு மாணவர்களின் கண்களை பரிசோதனை செய்திருந்தார்.
A.T.M அட்டை
மாணவர்களின் ஒரு கண்ணை மறைப்பதற்காக தன்னுடைய கைப்பையில் இருந்த A.T.M அட்டை எடுத்து மாணவர்களிடம் கொடுத்துள்ளார்.
அந்த அட்டையில் இருந்த இலக்கங்களை பார்வையிட்ட மாணவர்கள் சிலர் இணையம் மூலம் கேம் விளையாடி அந்த பணத்தை செலவழித்ததாக சுகாதார பரிசோதகர் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட குறித்த அதிகாரி பிள்ளைகளா அல்லது இவர்கள் பேய்களா என்று விழித்திருந்தார்.
காணொளி அதிகம் பேசுபொருளாகியதை தொடர்ந்து குறித்த பாடசாலையில் இன்றைய தினம் (16) சுகாதார பரிசோதகர் ,பொலிஸார்,கல்வி அதிகாரிகள்,பெற்றோர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பொலிஸ் விசாரணை
குறித்த கலந்துரையாடலுக்கு சமூகம் தருமாறு பாடசாலை அதிபரால் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிக்கு கடிதம் மூலம் மற்றும் தொலைபேசி ஊடாக தெரியப்படுத்தப்பட்ட போதும் கலந்துரையாடலில் குறித்த அதிகாரி பங்கு கொள்ளவில்லை.
சம்பவம் அறிந்து எமது பிரதேச ஊடகவியலாளரால் சுகாதார அதிகாரியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, பொலிஸ் விசாரணை மேற்கொள்ளப்படுவதால் மேல் அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கூட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாம் எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கு சமூகம் தந்த பெற்றோர்கள் . மாணவர்கள் தவறு செய்தால் அதை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக கூறியதோடு குறித்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.
சமூக வலைத்தளங்களில் இவர்கள் பிள்ளைகளா அல்லது பேய்களா என கேள்வி எழுப்பியதுடன் பிள்ளைகளின் கண்ணை மறைப்பதற்காக தவறாக இலத்திரனியல் அட்டையையும் கொடுத்திருக்கிறார்.
சுகாதார அதிகாரியின் தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவருக்கான பணத்தை தாம் வழங்குவதாக கலந்துரையாடலில் பங்கு கொண்ட பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




