பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவியை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கடத்தி சென்றதாக குற்றச்சாட்டு
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தனது மனைவி கடத்திச் சென்றுள்ளதாகக் கூறி, கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
தனது மனைவியை குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரே கடத்திச் சென்றுள்ளதாக அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இரவு 9.45 அளவில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு, சம்பந்தப்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் கண்டி வீதியில் சென்றதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து தான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
இதன் பின்னர் இவர்கள் இருவரும், கண்டி வீதியில் களனி தலுகம பிரதேசத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் சென்றதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த முறைப்பாடு குறித்து கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.