2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் குறித்து பாகிஸ்தான் வீரர் கருத்து!
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப்போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாவிட்டால், இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் (Shoaib Akhtar) தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளைப் பாகிஸ்தானில் நடத்துவது என்ற விடயம், இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டுச் சபை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை என்பவற்றுக்கு இடையே ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஏற்கனவே அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்
அதேநேரம் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப்போட்டிகளை புறக்கணிக்கப் பாகிஸ்தானும் சில நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று பிரபலமாக அறியப்படும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர், தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணப்போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படாவிட்டால், அவை இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக அக்தர் கூறியுள்ளார்.
ஆசியக் கிண்ண கிரிக்கட் மற்றும் உலகக் கிண்ணப்போட்டிகள் இரண்டின் இறுதிப்
போட்டிகளிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் என்பதே தமது
விருப்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.