நாட்டு மக்களின் பணம் அவர்களுக்கே..! 88 இலட்சம் ரூபாயை அரசிடம் மீள ஒப்படைத்த அருண் ஹேமச்சந்திரா
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பொறுப்பில் இருந்த காலப்பகுதியில், தனது உத்தியோகபூர்வ செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைப் பயன்படுத்தாமல் சேமிக்க முடிந்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொழுதே இது தொடர்பாகக் குறிப்பிட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கடந்த இரண்டு ஆண்டுகளில் பயன்படுத்தப்படாத மற்றும் மீள ஒப்படைக்கப்பட்ட நிதிகளின் விபரங்களை அவர் பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.
88 இலட்சத்து பயன்படுத்தவில்லை..
இதற்கமைய, நாடாளுமன்றத்தின் ஊடான எரிபொருள் கொடுப்பனவில் பெற்றுக்கொள்ளப்படாத தொகை – 34 இலட்சத்து 28 ஆயிரத்து 485 ரூபாவும், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத தொகை – 21 இலட்சத்து 87 ஆயிரத்து 875 ரூபாவும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கான சாரதி ஒதுக்கீட்டில் பயன்படுத்தப்படாத தொகை – 12 இலட்சத்து 38 ஆயிரத்து 760 ரூபாவும், வெளிநாட்டுப் பயணக் கொடுப்பனவுகளில் மீள ஒப்படைக்கப்பட்ட 5,616 அமெரிக்க டொலர்களின் ரூபாய் மதிப்பீடு – 18 இலட்சத்து 72 ஆயிரத்து 695 ரூபாவும், மீள ஒப்படைக்கப்பட்ட 392.49 யூரோக்களின் ரூபாவும் (மதிப்பீடு – ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 479 ரூபா) ஆகும். இதன்படி மொத்தம் 88 இலட்சத்து 71 ஆயிரத்து 294 ரூபா பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நாணயங்களின் ரூபாய் மதிப்புகள் மதிப்பீடுகளாகும் என்றும், பயன்படுத்தப்படாத நிதி ஒதுக்கீடுகள், பெற்றுக்கொள்ளப்படாத கொடுப்பனவுகள் மற்றும் ஏற்கெனவே பெற்றுக்கொண்டு மீள ஒப்படைக்கப்பட்ட தொகைகள் வெவ்வேறு நிதி நடைமுறைகளைக் கொண்டவை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், வாகன வசதிகளுக்கான தனியான மதிப்பீடு இதுவரை இந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அரச நிதி ஒதுக்கீடுகளைப் பொறுத்தவரையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு அமைச்சுக்கும் அரச நிறுவனத்துக்கும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நிதி ஒதுக்கப்படுவதாகவும், அவற்றைத் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக ஒதுக்கீடு தற்காலிக இடைநிறுத்தம்
நிதி ஒதுக்கீடுகளை மாற்றுவதற்கு உரிய சட்ட நடைமுறைகள் உள்ளதுடன், சில மாற்றங்களுக்கு திறைசேரியின் அங்கீகாரமும் தேவையான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தின் அனுமதியும் பெறப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான எரிபொருள் வசதிகள் ஏற்கெனவே கிடைக்கும்போது, அதே தேவைக்காக மற்றுமொரு ஒதுக்கீட்டிலிருந்தும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதால் மேலதிக ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களின்போதும் முழுமையாகப் பயன்படுத்தப்படாத நாளாந்தக் கொடுப்பனவுகளை உரிய நடைமுறைகளுக்கு அமைய மீள ஒப்படைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதற்கு உதாரணமாக வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றுக்குக் கணினி தேவைப்பட்ட சந்தர்ப்பத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
வேறு தேவைகளுக்கு மறுப்பு
அப்போது தனது பயணக் கொடுப்பனவில் எஞ்சியிருந்த பணத்தைப் பயன்படுத்தி கணினியைக் கொள்வனவு செய்ய முடியுமா எனப் பொறுப்பான அதிகாரியிடம் வினவியபோது, அந்த நிதி குறிப்பிட்ட உத்தியோகபூர்வப் பயணத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதால் வேறு தேவைக்குப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, எரிபொருள், பயணம் மற்றும் உத்தியோகபூர்வ வசதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வீதிகள், பாடசாலைகள் அல்லது வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காகத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது என்றும், அவற்றுக்கென தனியான நிதி ஒதுக்கீடுகளும் அங்கீகார நடைமுறைகளும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவையற்ற அரச செலவினங்களைத் தவிர்ப்பதன் மூலம் பொதுநிதியைப் பாதுகாக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு அரச நிறுவனமும் மக்கள் பிரதிநிதியும் இதே பொறுப்புணர்வுடன் செயற்பட்டால் அரச நிதி ஒழுக்கத்தையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை இருப்பதற்காக அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், உரிமை இருப்பதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கான உண்மையான தேவை இருப்பதற்கும் இடையில் வேறுபாடு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் வரிப்பணம்
மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் வசதிகள் தனிப்பட்ட சொத்துகள் அல்ல என்றும், அவை மக்களுக்குச் சேவை செய்வதற்காக ஒப்படைக்கப்பட்ட பொதுவளங்கள் என்றும் தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா, அவற்றைத் தேவைக்கேற்பவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது இந்த நடவடிக்கையைத் தனிப்பட்ட சாதனையாக முன்னிறுத்துவது நோக்கமல்ல என்றும், பொதுநிதியைப் பயன்படுத்துவதில் பொறுப்புணர்வும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடமிருந்து எழுப்பப்படும் கேள்விகளையும் விமர்சனங்களையும் வரவேற்பதாகவும், மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் பொறுப்புக்கூற வேண்டிய கடமை கொண்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.