ஏறாவூரில் இடம்பெற்ற தீவைப்பு சம்பவம்: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
மட்டக்களப்பு - ஏறாவூரில் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் காரியாலயம், வீடு உறவினரின் வீடு, விடுதி, கடை தீவைப்பு மற்றும் ஆடைத்தொழிற்சாலை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட 21 பேரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினரின் வீடு, விடுதி, கடை என்பன தீக்கிரையாக்கியதுடன், 3 ஆடைத் தொழிற்சாலையினை முற்றுகையிட்டு சேதமாக்கியுள்ளனர்.
பொலிஸ் குழுவினர் விசாரணை
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 16 வயதுடைய 2 சிறுவர்கள் உட்பட 24 பேரை இதுவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 16 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட 3 பேரைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 21 பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருந்தனர்.
இவர்களுடைய வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா
நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 21 ஆம்
திகதி வரை 14 நாட்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.



