கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளருக்கு விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) மற்றும் மகன் உட்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்று (10.01.2024) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம்
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி த.தே.ம. முன்னணி அமைப்பாளர் மற்றும் அவரது மகன் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சக்கரைவியாதியுள்ள மாவட்ட அமைப்பாளருக்கு காலில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளினால் மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட் போது மாவட்ட அமைப்பாளர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதால் நீதிமன்றில் ஆஜராகாத நிலையில் அவரது மகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மேலதிக விசாரணை
கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டவர்களின் கையடக்க தொலைபேசியில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இவர்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி கோரியதையதனால் நீதவான் அனுமதியளித்ததுடன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |