வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவானோர் போலி வீசாக்களுடன் விமான நிலையத்தில் கைது
தலா 4.5 மில்லியன் ரூபாய்களை செலுத்தி பெறப்பட்ட போலியான வீசாக்களுடன், மனித கடத்தல் மோசடி மூலம் கனடாவுக்குச் செல்ல முயன்ற ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போலி பயண ஆவணங்களுடன் வெளிநாட்டுக்கு குடிபெயர்ந்தநிலையில், அதிக எண்ணிக்கையான இலங்கையர்கள் கைது செய்யப்பட்ட முதலாவது சம்பவம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி பயண ஆவணங்கள்
முன்னதாக புறப்பாடு முனையத்தில் பணியாற்றிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், ஒரு உள்ளூர் பயணியின் இலங்கை கடவுச்சீட்டில்; ஒட்டப்பட்டிருந்த கனேடிய விசா போலியானது என்பது கண்டறியப்பட்டபோது, அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது, புலனாய்வுப் பிரிவின் கீழ் இயங்கும், குடிவரவுத்திணைக்களத்தின் எல்லை கண்காணிப்புப் பிரிவு ஸ்கேனர்கள் மூலம் குறித்த பயணியின் பயண ஆவணத்தைச் சரிபார்த்தபோது, கனேடிய வேலை விசா போலியானது என்பது தெரியவந்தது.
எனினும் அவரது இலங்கை கடவுச்சீட்டு உண்மையானது என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, போலி விசாக்களுடன் கனடாவுக்குச் செல்ல முயன்ற ஒரு பெண் உட்பட மேலும் எட்டு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 6.40 மணியளவில் துபாய்க்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்கான அனுமதிக்காக அவர்கள் அனைவரும் புறப்படும் அறையில் காத்திருந்தபோதே கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வரலாற்றில் முதல் முறையாக இவ்வளவு பெரிய குழுவினர், உள்ளூர் விமான நிலையத்தில் போலி பயண ஆவணங்களுடன் தடுக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என்று குடிவரவு விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
