செனட்டர் டெலா ரோசாவின் கைதை தடுத்து நிறுத்த பிலிப்பைன்ஸ் நாட்டு உயர் நீதிமன்றம் மறுப்பு!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICC) தேடப்பட்டு வரும் பிலிப்பைன்ஸ் செனட்டர் ரொனால்ட் டெலா ரோசாவின் கைதை தடுத்து நிறுத்த அந்த நாட்டு உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ துதெர்த்தேவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போதைப்பொருளுக்கு எதிரான போரின் போது மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களில் இவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினையடுத்தே உயர் நீதிமன்றம் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளது.
போதைப்பொருளுக்கு எதிரான போர்
வெளிநாட்டு நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் பிலிப்பைன்ஸ் சட்ட அமுலாக்கத்துறையினர் செயல்படுத்த முடியாது என்று கூறி டெலா ரோசா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தற்போதைக்கு செனட்டர் ‘பாட்டோ’ டெலா ரோசாவுக்கு எதிரான இந்த பிடியாணை செல்லுபடியாகும் என ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் செய்தித் தொடர்பாளர் கிளாரி காஸ்ட்ரோ நேற்று(20.05.2026) உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த வாரம் ஆறு மாத கால மறைவிடத்திலிருந்து வெளிவந்து நாடாளுமன்ற செனட் சபையில் தஞ்சம் புகுந்த டெலா ரோசாவை கைதுசெய்ய பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் முயன்றுள்ளனர்.
அப்போது அரசு முகவர்களுக்கும், செனட் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் அவர் செனட் வளாகத்திலிருந்து தப்பியோடி மீண்டும் தலைமறைவானார்.
தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டெலா ரோசாவின் வழக்கறிஞர், இது இறுதித் தீர்ப்பு அல்ல என்றும், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட வழிமுறைகளையும் கையாளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி துதெர்த்தேவின் கீழ் பிலிப்பைன்ஸ் தேசிய பொலிஸ் அதிகாரியாக இருந்த டெலா ரோசா, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னின்று நடத்திய முதன்மை அதிகாரி பார்க்கப்படுகிறார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மதிப்பீட்டின்படி, 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இந்த ஒழிப்பு நடவடிக்கையின் போது சுமார் 12,000 முதல் 30,000 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த போதைப்பொருள் ஒழிப்புப் போரில் பலியாகிப்போன அப்பாவி மக்களின் மரணங்களுக்குப் பொறுப்பான முன்னாள் ஜனாதிபதி துதெர்த்தே, ஏற்கனவே மார்ச் 2025 முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் காவலில் தி ஹேக் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நீதித்துறை அமைச்சர் பிரடெரிக் விடா, சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணை நடைமுறைப்படுத்தி டெலா ரோசாவை நிச்சயமாகக் கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.
அட்டமஸ்தானாதிபதி கைது விவகாரம் : 15 வயது சிறுமியைத் தவறாகச் சித்தரித்த அமுனுகமவுக்குக் கடும் கண்டனம்