தமிழர்களின் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கும் இராணுவம்: மா.சத்திவேல்
இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று (06.04.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அழிப்பு
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் 200 நாட்களை கடந்தும் தொடர்கின்றது.
அரசிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிர்பாராது தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பிட சுய தொழிலில் ஈடுபடும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்திற்கு ஆதாரமான நிலத்தை ஆக்கிரமிக்கவும், கால்நடைகளை கொல்வதற்கு குண்டர்களுக்கு இடம் அளித்தும் தமிழ் பண்ணையாளர்களின் வாழ்வை அழித்து வீதியில் தள்ளி இருப்பது இன அழிப்பும் இனப்படுகொலையும் தொடர்கின்றது என்பதன் வெளிப்பாடு எனலாம்.
தமிழ் கால்நடை பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை அழிக்கும் இனவாத குண்டர்களை அரசு பார்த்துக் கொண்டிருப்பதோடு பாதுகாப்பும் கொடுப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளிலும் அரசு இதையே செய்தது.
இராணுவமும், தொல்லியல் திணைக்களமும் தமிழர்கள் நிலங்களை மிக வேகமாக ஆக்கிரமிக்கின்றன. யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் விவசாய நிலங்களை எல்லாம் பறிபோன நிலையில் தற்போது சுயமாக தொழில் செய்யும் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை சீரழித்து நிலத்தை ஆக்கிரமிக்க குண்டர்களை ஏவி விட்டுள்ள பேரினவாதம் மகாவலி அதிகார சபையின் கீழ் வெறும் நிலங்களை சூறையாடவும் திட்டமிட்டு இருப்பது இஸ்ரேல் வழிமுறையிலான இன அழிப்பாகும்.
மனித உரிமை மீறல்
பாதிக்கப்பட்டுள்ள பண்ணையாளர்களின் நியாயத்தன்மையை ஏற்று நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்பினையும் அரச அதிகாரிகள் நடைமுறைப்படுத்த பின் நிற்பது மனித உரிமை மீறலோடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும்.
அது மட்டுமல்ல தங்களுடைய பிரச்சினையை கதைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் போதுமான காலத்தை அளிக்காது தீர்வு காண வழிகளையும் திறக்காதிருப்பது பண்ணையாளர்களை அழிக்கும் செயலுக்கு அப்பால் தமிழர்களுக்கு எதிரான பேரினவாத அரசியல் சதியாகும்.
ஆயிரம் பொங்கல் வைத்து தமிழர்களின் திருநாளாம் பொங்கல் விழாவினை எடுத்தவர் பண்ணையாளர்களுக்கு எதிராக நிற்பது பேரினவாதத்தின் கைக்கூலியாக செயல்படுவதன் அடையாளம் எனலாம்.
இத்தகைய பின்புலத்தில் தமிழ் பண்ணையாளர்களின் மேய்ச்சல் நில மீட்புக்கான போராட்டம் என்பது அவர்கள் சார்ந்த விடயமாக இருந்தாலும் அது தமிழர்களின் பாரம்பரியம் தமிழர் அடையாளம் மற்றும் அரசியல் சார்ந்த விடயமாகும்.
அரசியல் போராட்டம்
இதற்கு
கிழக்கின் தமிழ் பண்ணையாளர்களால் மட்டும் முகம் கொடுக்க முடியாது. அது
வடகிழக்கு சார்ந்த மக்கள் அரசியல் போராட்டமாக உருமாறல் வேண்டும்.
ஒரு சில அரசியல்வாதிகளின் ஆதரவைத் தவிர பொதுவாக தாம் கைவிடப்பட்டுள்ளோம் என்ற மன நிலையிலேயே 200 நாட்களை கடந்தும் பண்ணையாளர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதனைப் பயன்படுத்தி தமிழர்களின் தாயக அரசியலை ஏற்காத தெற்கின் போராட்டக் குழு ஒன்றும் தமது அரசியலுக்காக இவர்களை பயன்படுத்த முனைகின்றது. எமது போராட்டங்கள் குடும்ப விழாக்களைப் போன்றும், ஊர் திருவிழாக்களை போன்றும், மாவட்ட, மாகாணமட்ட விழாக்கள் போன்றும் காலத்திற்கு காலம் நடத்துவது தோல்விக்கே வழிவகுக்கும்.
இதனையே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர். தமிழர்களின் தாயக அரசியலுக்கு எதிரான சக்திகளும் விரும்புகின்றன. இதற்கு இடம் அளிக்காது புதிய வடிவிலான மக்கள் போராட்டங்கள் முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.
அரசியல் வேலை திட்டம்
வடகிழக்கு தமிழர்களின் சுதந்திரம், கௌரவம் என்பன தாயகம் காக்கும் அரசியல் செயல்பாடு என்பதை நாம் அறிவோம். அதற்காகவே ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைக்க போராட்ட மையம் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.
இது குளிர் அறையில் இருந்து கதைக்கும் விடயம் அல்ல. போராட்டம் மையம் என்பது சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய தலைமைத்துவ குழுவின் தன்மையைக் கொண்டது. பொதுவானதும் உறுதிமிக்கதுமான அரசியல் வேலை திட்டத்தின் கீழ் போராட்ட வடிவங்களை உருவாக்கி அதனை முன்னெடுக்க வேண்டும்.
ஏனெனில் தமிழர்கள் போராடுவது அரசிடமிருந்து இலவசங்களையோ சலுகைகளையோ பெற்றுக் கொள்வதற்கு அல்ல என்பது நாம் அறிந்ததே. இது வலுவிழக்க கூடாது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |