வெளிநாடொன்றில் 2 முக்கிய ஊடகங்களை முடக்க இராணுவ தளபதி உத்தரவு!
உகாண்டா நாட்டின் மிகப்பெரிய மற்றும் சுதந்திரமான நாளிதழான 'டெய்லி மானிட்டர்' மற்றும் முன்னணி தனியார் தொலைக்காட்சியான 'என்டிவி உகாண்டா' ஆகிய இரு முக்கிய ஊடக நிறுவனங்களையும் உடனடியாக மூடுவதற்கு அந்நாட்டு இராணுவ தளபதி முஹூசி கைனருகாபா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் மகனான இராணுவ தளபதி கைனருகாபா தனது எக்ஸ் தளத்தில், "உகாண்டாவில் ஊடகச் சுதந்திரம் இருப்பதை நான் நம்பவில்லை; இனிமேல் உகாண்டாவைப் பற்றிய எந்தவொரு எதிர்மறையான செய்தியும் எனது அலுவலகத்தின் அனுமதியின்றி வெளியாகக் கூடாது" என்று சர்வாதிகாரப் போக்குடன் பதிவிட்டுள்ளார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, தலைநகர் கம்பாலாவில் உள்ள 'நேஷன் மீடியா குரூப்' தலைமையகத்தை ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், ஊழியர்கள் யாரும் உள்ளே செல்லவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படவில்லை.
அதிரடி நடவடிக்கை
இந்த அதிரடி நடவடிக்கையால் உகாண்டா முழுவதும் என்டிவி, ஸ்பார்க் டிவி உள்ளிட்ட பல தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு முதல் உகாண்டாவை ஆண்டு வரும் ஜனாதிபதி முசெவேனியின் அடுத்த வாரிசாகக் கருதப்படும் கைனருகாபா, ஊடகங்களை முடக்குவதற்கான அதிகாரம் 2017ஆம் ஆண்டே தனது தந்தையால் தனக்கு வழங்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உகாண்டா அரசின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு அந்நாட்டின் தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் தங்களின் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, இது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஊடக உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது.