இலங்கை அரசுடன் முறுகலில் வத்திகான் சென்ற பேராயர் நடத்தும் சிறப்பு திருப்பலி பூஜை:திருத்தந்தையும் கலந்துக்கொள்கிறார்
வத்திகானில் உள்ள கத்தேதலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாளைய தினம் வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் சிறப்பு திருப்பலி பூஜையை நடத்தவுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மையை வெளியில் கொண்டு வருவதற்காக ஆன்மீக ரீதியிலான தலையீட்டை பெற்றுக்கொள்வது இந்த திருப்பலி பூஜையின் நோக்கம் என தெரியவருகிறது.
இதனடிப்படையில், இந்த சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்துக்கொள்ளும் ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர்களான இத்தாலியில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாளைய தினம் முற்பகல் 10 மணிக்கு வத்திகான் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடுமாறும், மதியம் 12 மணியளவில் திருத்தந்தையும் திருப்பலி பூஜையில் கலந்துக்கெள்வார் எனவும் கூறியுள்ள ஒருங்கிணைப்பாளர்கள், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியை பெற்று தரும்படி பாப்பரசரிடம் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நடத்தப்படும் விசாரணைகள் போக்கு தொடர்பில் பேராயருக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு முறுகலான நிலைமை இருந்து வருகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விடயத்தில் தற்போதைய அரசாங்கம் நீதியை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கில்லை என பேராயர் பகிரங்கமாக கூறியிருந்தார்.
அத்துடன் இந்த விடயத்தை சர்வதேச தளத்திற்கு கொண்டு சென்று நீதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



