களுவாஞ்சிகுடியில் உடனடியாக அழிக்கப்பட்ட சுமார் 224 கிலோகிராம் வாழைப்பழங்கள்
களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் சட்டவிரோத முறையில் இரசாயனப் பதார்த்தம் தெளிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 224 கிலோகிராம் வாழைப்பழங்கள் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு இன்று (27.11.2026) உடனடியாக அழிக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினரால் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் உணவுப் பரிசோதனை நடவடிக்கையின் போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டது.

வாழைப்பழங்களின் மீது இரசாயனம்
குறித்த சோதனையின் போது, பழங்களைப் பழுக்க வைப்பதற்காகவோ அல்லது கவர்ச்சிகரமாகக் காட்டுவதற்காகவோ வாழைப்பழங்களின் மீது நேரடியாக இரசாயனப் பதார்த்தம் விசிறப்பட்டு, பொதுமக்களின் விற்பனைக்காக வெளிக்காட்டி வைக்கப்பட்டிருந்தமையை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, சுகாதார விதிமுறைகளை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 224 கிலோகிராம் எடையுள்ள வாழைப்பழங்கள் அதிகாரிகளால் உடனடியாகக் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு சுகாதாரப் பிரிவினரால் பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
உணவுப் பொருட்களில் இவ்வாறு சட்டவிரோத இரசாயனங்களைப் பயன்படுத்துவது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாரிய தீங்கை விளைவிக்கும் என்பதால், நுகர்வோர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri