கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திஸாநாயக்க பொறுப்பேற்பு
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக ஆளுநரால் நியமிக்கப்பட்ட எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திஸாநாயக்க இன்று(7) திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்வி அமைச்சில் தம் கடமைகளைச் சுபநேரத்தில் ஆரம்பித்தார்.
கிழக்கு மாகாண கல்விச் செயற்பாடுகளைச் சிறந்த நிலைக்குக் கொண்டுவர அனைவரது ஒத்துழைப்பை வழங்குமாறும் இன்று தொடக்கம் அதற்காக தம்மிடம் வழங்கப்பட்ட இப்பாரிய பொறுப்பிற்கான கடமைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் 385000க்கு மேற்பட்ட மாணவர்களும் 25000க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் சுமார் 3000க்கு மேற்பட்ட கல்வித்துறை உத்தியோகத்தர்களும் உள்ளனர்.
கிழக்கு மாகாண சபையிலே உள்ள ஒட்டுமொத்த ஆளணியில் அரைவாசிப்பேர் கல்வியமைச்சிலேயே காணப்படுகின்றனர். எனவே மிகவும் வேலைப்பளுமிக்க ஒரு அமைச்சாக இவ்வமைச்சு காணப்படுகின்றது.
கல்வித்துறையில் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்த தமக்கு ஏற்படுத்த முடியும் என்ற விசுவாசத்தின் பேரில் ஆளுநர் இப்பதவிக்கு தம்மை நியமித்ததாகவும் அதற்கேற்ப செயற்பாடுகள் கிரமமாக மேற்கொள்ளப்படும் என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் நுழைந்த இவர் தன்னுடைய முதல் பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வணிகத் துறையிலும் இரண்டாவது பட்டத்தை எம்.ஏ( பொது நிர்வாகம்) இந்தியாவிலும் எம்.எஸ்.எஸ்.சி(Econ)பட்டத்தை களனி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.எ பட்டத்தை சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் எல்.எல்.பி பட்டத்தை ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகத்திலும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்.
அத்துடன் நல்லாட்சி தொடர்பான டிப்ளோமா பாடநெறியை ஐக்கிய இராச்சியத்தின் இலினோ பல்கலைக்கழகத்திலும் இவர் பூர்த்தி செய்துள்ளார். மத்திய மாகாண சபையில் மாநகர ஆணையாளர், பிரதி உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், விசேட ஆணையாளர் பதவிகளையும் வகித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதி பிரதம செயலாளர்( நிர்வாகம்), மாகாண காணி ஆணையாளர், முன்பள்ளி பாடசாலை பணியக தலைவர் ஆகிய பதவிகளையும் இதற்கு முன் வகித்துள்ளார்.
மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பதவி ஏற்க முன்னர் பிரதம செயலாளர் ( நிர்வாகம்) பதவியை இவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை அமைச்சின் செயலாளர்கள், சிரேஸ்ட நிர்வாக
சேவை அதிகாரிகள், சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.



