மே 9 வன்முறை தொடர்பில் உண்மையை கண்டறியும் குழு! ஜனாதிபதிக்கு சென்ற கடிதம்!
கடந்த மே மாதம் 9ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உண்மையை கண்டறியும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படுவதாக கூறும் பத்து அரசியல் கட்சிகள், இந்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்துள்ளன.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண போன்ற கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான கடிதத்தில், ஆணைக்குழுவின் பணிகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவுறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அலரிமாளிகையில் ஆரம்பித்து பல நாட்களாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவிய வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கடிதத்தில் கோரியுள்ளனர்.
வன்முறைக்கான அடிப்படைக் காரணம், அவற்றை திட்டமிட்டு, செயல்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் 10 கட்சிகளின் தலைவர்கள் கேட்டுள்ளனர்.