தியாகதீபம் திலீபனை நினைவேந்தும் உரிமையை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள்
தியாகதீபம் திலீபனை நினைவேந்தும் செயற்பாடு தனிநபர் ஒருவரை நினைவுகூரும் செயற்பாடு மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கூட்டு நினைவு, வரலாறு, அரசியல் வெளிப்பாடு மற்றும் பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றுடனும் தொடர்புடையதாகும் என ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ். வணிகர் கழகம், தீவக விருட்சம், தீவக சிவில் சமூகம், போராளிகள் நலன்புரிச் சங்கம், குரலற்றவர்களின் குரல் அமைப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், வடக்கு - கிழக்கு மக்கள் செயல், யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம், தாயகச்செயலணி, இலங்கை ஆசிரியர் சங்கம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தீவக நினைவேந்தல், ஏற்பாட்டுக்குழு, தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு, தியாகி திலீபன் ஆவணக் காப்பகம், சூழலியல் மேம்பாட்டு அமைவனம் (சூழகம்), தவத்திரு வேலன் சுவாமிகள், அருட்தந்தை ஜெபரட்ணம், பிரபாகரக்குருக்கள், அருட்தந்தை வசந்தன் ஆகியோர் இணைந்து கடிதமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க்கிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
குறித்த கடிதத்திலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமை
அதில் மேலும், தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்வதற்கான மக்களின் சுயநிர்ணய உரிமை சர்வதேச மனித உரிமைச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (ICCPR) பிரிவு 1, அனைத்து மக்களுக்கும் தமது அரசியல் நிலையைச் சுதந்திரமாகத் தீர்மானித்துக்கொள்வதற்கும், தமது பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுப்பதற்குமான சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்துகின்றது. இலங்கையில் தமிழ் மக்களும் தமது அரசியல் உரிமைகள் மற்றும் அரசியல் எதிர்காலம் தொடர்பான கோரிக்கைகளை வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வழிமுறைகளில் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அவற்றுள் அகிம்சை வழியிலான அரசியல் போராட்டமும் முக்கியமான ஓர் அங்கமாக அமைந்துள்ளது. அதன் குறிப்பிடத்தக்க வரலாற்று அடையாளங்களில் ஒருவராகவே தியாகதீபம் திலீபன் தமிழ் மக்களின் கூட்டு நினைவில் நிலைத்திருக்கின்றார். 1987 ஆம் ஆண்டு, இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீராகாரம் மற்றும் உணவு எதனையும் உட்கொள்ளாது திலீபன் மேற்கொண்ட உண்ணாநோன்புப் போராட்டம் அவரது உயிரிழப்புடன் முடிவடைந்தது.

தனது அரசியல் கோரிக்கைகளை ஆயுதமின்றி, தனது உடலையே போராட்டத்தின் ஊடகமாக்கி வெளிப்படுத்திய இந்நிகழ்வு தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றிலும் கூட்டு நினைவிலும் ஆழமான இடத்தைப் பெற்றுள்ளது. உலகிற்கு அகிம்சைப் போராட்டத்தின் வலிமையை எடுத்துக்காட்டிய மகாத்மா காந்தியின் தேசமான இந்தியாவின் அமைதிப்படையிடம் முன்வைக்கப்பட்ட இந்த அகிம்சை வழிப் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளது.
அதனாலேயே தியாகதீபம் திலீபனை தமிழ் மக்கள் நீண்டகாலமாக நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நினைவேந்தல் என்பது தனிநபர் ஒருவரை நினைவுகூரும் செயற்பாடு மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கூட்டு நினைவு, வரலாறு, அரசியல் வெளிப்பாடு மற்றும் பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றுடனும் தொடர்புடையதாகும். அமைதியான நினைவேந்தல் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தால் பாதுகாக்கப்படும் பல்வேறு உரிமைகளுடன் தொடர்புடையவை.
அமைதியான ஒன்றுகூடல்
மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் (UDHR) பிரிவுகள் 19 மற்றும் 20, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் உரிமையையும் அங்கீகரிக்கின்றன. அதேபோன்று, இலங்கையும் அரசுத் தரப்பாக உள்ள ICCPR-இன் பிரிவுகள் 19 மற்றும் 21, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அமைதியான ஒன்றுகூடல் உரிமையையும் பாதுகாக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் General Comment No. 37 அமைதியான ஒன்றுகூடல் உரிமையின் பாதுகாப்பையும், அதன்மீதான கட்டுப்பாடுகள் சட்டபூர்வமானவையாகவும் அவசியமானவையாகவும் அளவானவையாகவும் இருக்க வேண்டியதையும் வலியுறுத்துகின்றது.
மேலும், கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் மோதல்களுக்குப் பிந்தைய சூழல்களில் நினைவுகூரல் (Memorialization) என்பது உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்களுடன் தொடர்புடைய முக்கியமான செயல்முறையாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பொறிமுறைகளால் அணுகப்பட்டுள்ளது. எனவே, அமைதியான நினைவேந்தலை அரசினால் வழங்கப்படும் ஒரு “அனுமதி” அல்லது “சலுகை” என்ற அடிப்படையில் மட்டும் அணுக முடியாது; அது கருத்து வெளிப்பாடு, அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கூட்டு நினைவு ஆகிய மனித உரிமைகளின் அடிப்படையில் அணுகப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில், தியாகதீபம் திலீபனின் நினைவாலயம் தொடர்பான அரச நிர்வாகப் பின்னணியும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறித்த நினைவாலயத்தை அமைப்பதற்காக இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அரச நிதி ஒதுக்கப்பட்டு, உரிய அரச நிர்வாக நடைமுறைகளின் ஊடாக அந்நிதி விடுவிக்கப்பட்டு, அதனைப் பயன்படுத்தியே குறித்த நினைவாலயம் மீள்நிர்மாணப் பணிகளின் ஆவண ஆதாரங்கள் காணப்படுகின்றன. எனவே, குறித்த நினைவாலயம் அரச நிர்வாக நடைமுறைகளுக்கு முற்றிலும் புறம்பாக உருவாக்கப்பட்ட ஒன்றாக மட்டும் சித்தரிக்கப்பட முடியாது.
இத்தகைய பின்னணியில், தமிழ் மக்களின் கூட்டு நினைவில் அகிம்சை வழிப் போராட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலை குறித்த நினைவாலயத்திலிருந்து அகற்றப்பட்டமை, தமிழ் மக்களின் நினைவு, அரசியல் வெளிப்பாடு மற்றும் அமைதியான நினைவேந்தல் உரிமைகள் தொடர்பில் தீவிரமான கவலையை ஏற்படுத்துகின்றது. அதேவேளை, தமிழ் மக்கள் கடந்த காலங்களில் தமது நினைவேந்தல்களை எவ்வித தடைகளுமின்றி மேற்கொண்டனர் என்ற தோற்றத்தையும் உருவாக்கக்கூடாது.
நினைவேந்தல்
பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள், கண்காணிப்புகள், தடைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்த அச்சங்களுக்கு மத்தியிலேயே தமிழ் மக்கள் நினைவேந்தல்களை முன்னெடுத்து வந்ததாக மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்ட சமூகங்களும் தொடர்ச்சியாகக் கூறிவந்துள்ளன. எனவே, எமது கோரிக்கை கடந்த காலத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஓர் “அனுமதியை மீண்டும் வழங்குங்கள்” என்பதல்ல. மாறாக, தமிழ் மக்கள் தமது இறந்தவர்களையும், தமது வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றவர்களையும், தமது கூட்டு வரலாற்று அனுபவங்களையும் அச்சுறுத்தல், கண்காணிப்பு, தேவையற்ற தலையீடு மற்றும் தடைகள் இன்றி அமைதியாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூரக்கூடிய மனித உரிமைச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

ஆகவே, தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறும், தமிழ் மக்களின் அமைதியான நினைவேந்தல் உரிமை மதிக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், சம்பந்தப்பட்ட ஐ.நா. விசேட நடைமுறைகள், சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றை விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பாக, நினைவேந்தல்களின் போது அச்சுறுத்தல், கண்காணிப்பு மற்றும் தேவையற்ற தலையீடுகள் இடம்பெறாத சூழலை உறுதிப்படுத்தவும்; அமைதியான நினைவேந்தல்களின் மீதான எந்தவொரு கட்டுப்பாடும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் சட்டபூர்வத்தன்மை, அவசியம் மற்றும் அளவுத்தன்மை ஆகிய நியமங்களுக்கு உட்பட்டதாக இருப்பதை உறுதிப்படுத்தவும்; அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் திருவுருவச்சிலையை அதன் நினைவாலயத்தில் மீள நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகின்றோம்.
நினைவேந்தல் என்பது அரசினால் வழங்கப்படும் ஒரு சலுகையாக மட்டும் அணுகப்பட வேண்டியதல்ல; அது கருத்து வெளிப்பாடு, அமைதியான ஒன்றுகூடல் மற்றும் ஒரு சமூகத்தின் கூட்டு நினைவு ஆகிய மனித உரிமைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். தமிழ் மக்கள் தமது வரலாற்றையும் நினைவுகளையும் அச்சமின்றி, அமைதியாகவும் சுதந்திரமாகவும் நினைவுகூரக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவது அவசியமாகும். இவ்விடயத்தில் தங்களது தலையீடும் தொடர்ச்சியான அவதானிப்பும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முக்கியமான பங்களிப்பாக அமையும் என நம்புகிறோம். தங்கள் கவனத்திற்கும் பரிசீலனைக்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.