வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மேன்முறையீடு! நீதியரசர்களின் தீர்மானம்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர்.
வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை திரும்பப் பெறுவதற்கு சட்டமா அதிபரின் தீர்மானத்தை எதிர்த்து 2008ஆம் ஆண்டு காணாமல் போன 5 இளைஞர்களின் பெற்றோர்கள் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
குறித்த ஐந்து பேரும் 2008 செப்டெம்பர் 17ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் காணாமல் போனதாக மனுதாரர்கள் குறிப்பிடுகின்றனர்.
வழக்கிலிருந்து விலகல்
குறித்த வழக்கு 3 உயர் நீதிமன்ற நீதியரசர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நீதியரசர் நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக பணியாற்றிய போது, அசல் ரிட் மனு தொடர்பான அமர்வில் உறுப்பினராக இருந்ததால், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |