அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய பின்னர், எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைபடுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை அறிக்கை
இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அடுத்த நீதிமன்றத் திகதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சந்தேக நபருக்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட சந்தேக நபரின் மூத்த சகோதரியும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரால் திருடப்பட்ட மருத்துவரின் கையடக்க தொலைபேசியை இதுவரை பொலிஸார் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தொலைபேசி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, நேற்று (13) சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு கிண்ணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைக்குண்டு, ஒரு உடை மற்றும் ஒரு நகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
