ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி! விசாரணையில் வெளியான தகவல்
அநுராதபுரம் - மஹாமன்கடவல, அலையபத்து பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாயும், அவரது இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
அநுராதபுரம் அலையபத்து பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். தீ விபத்து ஏற்பட்ட போது தந்தை வேறொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் அறைக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றும் போது அறையில் தீ முற்றாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத மின் இணைப்பு
தீ விபத்தில் 33 வயதான தாய், 10 வயது மகள் மற்றும் 05 வயது மகன் ஆகியோர் தீயில் சிக்கி உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுர பதில் நீதவான் சந்தன வீரகோன் நேற்று (27) பிற்பகல் வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், தீ விபத்து ஏற்பட்ட போது அறையில் பெட்ரோல் போத்தல் இருந்ததாகவும் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.