உலக அரங்கில் மனிதநேயம் மிக்கதொரு நாடாக இலங்கை! அரசின் பிரதான எதிர்பார்ப்பு என அநுர தெரிவிப்பு
இலங்கையை உலக அரங்கில் மனிதநேயம் மிக்கதொரு நாடாக மாற்றுவதே தமது அரசின் பிரதான எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொருளாதார ரீதியாகப் பின்னடைவு
உலகில் எத்தகைய போர்கள் இடம்பெற்றாலும், மனிதநேயத்தின் கொடியை ஏந்திச் செல்லும் தேசமாக இலங்கை திகழ வேண்டும் என்ற செய்தியை நாம் உலகுக்கு உரக்கச் சொல்ல விரும்புகின்றோம்.

எமது நாடு பொருளாதார ரீதியாகப் பின்னடைவுகளைச் சந்தித்திருந்தாலும், மனிதநேயம் மிக்க மக்கள் வாழும் நாடாக இலங்கையை சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்துவோம்.
அனைத்து மக்களையும் பேதமின்றி, பரிவுணர்வுடன் நடத்தும் ஓர் அரசை உருவாக்குவதில் இந்நாட்டுப் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் முக்கிய இடமுண்டு நுண்நிதி கடன் சுமையால் கிராமப்புறப் பெண்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
பொறுப்பை அரசு ஏற்கும்
இதனைத் தடுக்கும் வகையில், முறையான சட்டங்கள் உருவாக்கப்படும். குறிப்பாக, கடன் பெறுவதற்குச் சொத்துக்கள் இல்லாத பெண்களுக்கு அரசே பிணை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

ஒருவேளை அப்பெண்களால் கடனைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை அரசு ஏற்கும் அத்துடன், மகளிர் அமைச்சினூடாக வழங்கப்படும் நிதி உதவித் திட்டங்கள் இவ்வருடமும் அடுத்த வருடமும் மேலும் பலப்படுத்தப்படும்.
இன்று இளைஞர்களைச் சீரழிக்கும் நச்சுப் போதைப்பொருள் அனர்த்தத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும். இது தாய்மார்களின் மனங்களில் உள்ள பாரிய அச்சத்தைப் போக்கும்.
பெண்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள்
அதேபோல், பிள்ளைகளின் கல்விச் சுமையைக் குறைக்க அடுத்த வருடம் தரம் 6 முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் அறிவுடன் கூடிய, பரிவுணர்வுள்ள சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளைத் தடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லையெனில், புதிய சட்டங்கள் இயற்றப்படும்.
அதேபோல், சில கலாசாரக் காரணிகளால் ஒடுக்கப்பட்டுள்ள பெண்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள், எவ்வித கலாசார மோதல்களுமின்றி தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








