ஆதரவின்றி மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்கிறதா அநுர அரசு..! அஜித் பி. பெரேரா பரபரப்பு குற்றச்சாட்டு
இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றச் செயற்குழுவைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருக்குமானால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்திடிக் காட்டுமாறும் சவால் விட்டுள்ளார்.
களுத்துறையில் நேற்று(13.09.2026) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஒரு வருட காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அரசு மக்களுக்கு அளித்த பிரதான வாக்குறுதியாகும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு எந்தவிதமான யோசனையும் இல்லை. இதனால் இன்று மாகாண சபைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன.

அவை ஆளுநரின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவது எந்த வகையிலும் பொருத்தமானதும் அல்ல, ஜனநாயகமானதுமன்று. அதே போன்று, அரசு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான தந்திரோபாயமாகவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்தது. கடந்த 9 மாதங்களாகத் தெரிவுக்குழு கூடியும் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் பல்வேறு தந்திரோபாயத் திட்டங்களை மேற்கொண்டு அரசு அந்தக் கூட்டங்களைக் குழப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வந்தது. இதனால், இதன் பின்னர் அந்தத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதில்லை எனவும், அதனை முற்றாகப் புறக்கணிப்பதாகவும் அதில் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்துத் தீர்மானித்துள்ளோம்.
21 தடவைகள் திருத்தப்பட்ட அரசமைப்பை
அதேபோன்று, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் காலத்தை நீடிப்பதற்காக அரசு கொண்டுவந்த பிரேரணைக்கும் எதிர்க்கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. தொடர்ந்தும் மாகாண சபைத் தேர்தலைப் பிற்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமையை மீறி வருவதாலேயே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்.

இந்த அரசுக்கு 75 சதவீத மக்கள் ஆதரவு இருப்பதாகப் பிரசாரம் செய்யும் தரப்பினர், பழைய முறைமைக்காவது மாகாண சபைத் தேர்தலை நடத்திடிக் காட்ட வேண்டும். அவ்வாறில்லையாயின், தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ள உத்தேச முறைமையிலாவது தேர்தலை நடத்தலாம்.
ஆனால், எந்த முறைமையிலும் தேர்தலை நடத்தாது, குறுகிய தந்திரங்களைக் கையாண்டு தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேலும், அரசு நாடு முழுதும் மக்கள் பேரணிகளை நடத்திச் செல்கின்ற போதிலும், இதுவரை இடம்பெற்ற எந்தவொரு பேரணியிலும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தைகூடத் தெரிவிக்கவில்லை.
அதேபோன்று, மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய அரசமைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி வாய் திறக்காமல் மௌனம் காக்கின்றார். அதனை விடுத்து, ஏற்கனவே 21 தடவைகள் திருத்தப்பட்டுத் திரிபுப்படுத்தப்பட்டுள்ள அரசமைப்பை, 22 ஆவது தடவையாகவும் திருத்துவதற்கு மட்டுமே அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.