அநுரவின் இரண்டு வருட ஆட்சி தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றமே! எழும் குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கடந்த இரண்டு வருட ஆட்சி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றமே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொய்யான வாக்குறுதிகள்
மேலும் தெரிவிக்கையில், "இன்றைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் ஆட்சியைப் பிடித்த பின்னரும் தமிழ் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியிருந்தார்.

ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது தமிழ் மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
அந்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வியையே பலரும் முன்வைத்துள்ளனர்.
இவ்வாறாகத் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ள சூழ்நிலையில்தான் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளது. எனவேதான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் சொல்கிறோம், நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நீங்களே விரைந்து நிறைவேற்றுங்கள்.
இல்லையேல், உங்களுடைய பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ள தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி தொடர் போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.