சுரேஷ் சலேவின் மனைவி ஜனாதிபதிக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம்...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் மனைவி மிகுந்த மனவேதனையுடன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தனது கணவர் எதிர்கொண்டுள்ள கடுமையான நிலைமை குறித்து மிகவும் உருக்கமான மற்றும் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தற்போதைய பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்கவிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ள சுரேஷ் சலேவின் மனைவி எஸ்.பி.எம். இஸ்பி சலே தனது கணவருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவு முற்றிலும் அநியாயமானது எனத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
எலிகள் நிறைந்த சிறையறை
சட்டத்தரணிகள் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுக்களிலும் குறிப்பிட்டுள்ளவாறு சலே அடைத்து வைக்கப்பட்டுள்ள 6.5 - 4.5 அடி அளவிலான சிறையறை எலிகள் நிறைந்து காணப்படுவதாகவும் எலிக் கடிக்கு பயந்து அவர் முறையான தூக்கமின்றி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த இரவொன்றில் அதிகாரிகள் குழுவினர் சிறைக்குள் நுழைந்து சாலேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றி நிர்வாணப்படுத்தி அமானுஷ்ய மற்றும் அநாகரிகமான முறையில் நடத்தியுள்ளனர்.

இச்செயல் 1994 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க சித்திரவதைகளுக்கு எதிரான உடன்படிக்கைச் சட்டத்தை நேரடியாக மீறும் செயலாகும் என்றும் இது தொடர்பான சி.சி.டி.வி (cctv) காட்சிகளைப் பாதுகாக்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கோரிய போதிலும் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநாகரிகமாக நடத்தல்
மேலும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றின் உத்தரவின் பேரில் சலேவை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தவிருந்த நிலையில் மருத்துவ முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் நோக்கில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) அவரை முன்னிலைப்படுத்துவதை 10 நாட்களுக்கும் மேலாக திட்டமிட்டு தாமதப்படுத்தியதாக மனைவி தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முந்தைய விசாரணைகளின் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத் தனது கணவரைப் பலிக்கடாவாக்குவதாகக் கூறும் திருமதி சலே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு அவரை விளக்கமறியலில் வைக்க அல்லது விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.