அவர்கள் ஒரு குற்றவியல் அரசை உருவாக்கினர்; நாம் அதை மாற்றி வருகிறோம் - ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
முன்னைய அரசாங்கங்கள் ஊழல் மற்றும் குற்றச் செயல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தனது அரசாங்கம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
37ஆவது கார்த்திகை வீரர்கள் நிகழ்வில் உரையாற்றிய அவர், 2024ஆம் ஆண்டுக்குப் பின்னரும் நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் போராட்டம் தொடர்கிறது என்று குறிப்பிட்டார்.
இனிமேல் பாதுகாக்கப் போவதில்லை
ஊழல்வாதிகளையும் மோசடியில் ஈடுபட்டவர்களையும் இனிமேல் பாதுகாக்கப் போவதில்லை. இனவாதம் மற்றும் மதவாதத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதை எதிர்க்கிறோம்.
இந்த நிலையில், நாட்டின் எதிர்காலம் மூடநம்பிக்கைகளில் அல்ல; அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவில் கட்டியெழுப்பப்பட வேண்டும். அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.
ஆனால் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒழுங்குமுறையுடனும் தெளிவான நோக்கத்துடனும் அமைய வேண்டும்.

அரசியல் பலத்தை உணர்ந்ததன் வெளிப்பாடு
மேலும், எதிர்க்கட்சிகளின் அரசியல் ஒன்றிணைவு முயற்சிகள் தேசிய மக்கள் சக்தியின் வளர்ந்து வரும் அரசியல் பலத்தை உணர்ந்ததன் வெளிப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசியல் குழப்பங்களுக்கும் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கும் மக்கள் துணைபோகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.