போலியான பெயர்ப்பட்டியலை வெளியிடுவதில் அநுர அரசாங்கம் சாதனை! தொலவத்த விமர்சனம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் போலியான பெயர்ப்பட்டியல்களை வெளியிடுவதில் சாதனை படைத்துக் கொண்டிருப்பதாக பொதுஜன பெரமுண கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த(Premnath C. Dolawatte) விமர்சித்துள்ளார்.
கொழும்பில் இன்று(8) நடைபெற்ற செய்தியாளர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சேறுபூசும் அரசியல் கலாசாரம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரகலய போராட்டக் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்களினால் எமது இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.
எங்களுக்கு வசிப்பிடங்கள் இல்லாமல் போனது. அதன் காரணமாகவே நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து 25 - 50 சதவீத முற்பணத்தை செலுத்தி வீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது.
எனவே பொய்யான பெயர் பட்டியல்களை வெளியிட்டு எதிர்தரப்பினர் மீது சேறுபூசும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.
தமது இயலாமையை மறைப்பதற்காக ஏதேனுமொரு பெயர் பட்டியல்களை வெளியிடும் அரசாங்கம் தற்போது வீடுகள் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.
பொய்யான பட்டியல்கள்
வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு பதிலாக ஏனைய அரசியல்வாதிகள் மீது சேறு பூசுவதன் ஊடாக தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.
அன்றைய சந்தைப் பெறுமதிக்கமையவே அந்த வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. முற்பணம் மாத்திரமின்றி எஞ்சிய தொகையை இரு தவணைகளில் உரிய நேரத்தில் நான் செலுத்தியிருக்கின்றேன். மிகுதித் தொகையையும் அவ்வாறே செலுத்துவோம்.
இதில் என்ன நஷ்டம் என அரசாங்கம் கூறுகிறது? இவ்வாறு பொய்யான பட்டியல்களை வெளியிடுவதில் மாத்திரமே இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பொய் கூறி மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
ஜே.வி.பி.யே எமது வீடுகளை தீக்கிரையாக்கி எமது சொத்துக்களை அழித்தது. எனவே எமக்கு கிடைக்கப் பெற்ற இழப்பீடுகள் குறித்து பேசுவதற்கு இவர்களுக்கு உரிமையில்லை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 17 மணி நேரம் முன்

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. இவர்தான், போட்டோ இதோ Cineulagam
