காவி உடையில் கை வைத்து தவறிழைத்துள்ள அநுர : சஜித் குற்றச்சாட்டு
தற்போது பல்வேறு வழிகளில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையே மோதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத வேறுபாடு, மதவாதம், இன வேறுபாடு மற்றும் இனவாதம் என்பன ஒரு புற்றுநோயாகும். இந்தப் புற்றுநோயை நாம் குணப்படுத்தி, அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய செழிப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
காவி உடையில் கை வைப்பதற்கு
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "நாட்டின் அனைத்து மக்களும் அரசமைப்பை வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும். நமது நாடு ஒற்றையாட்சி, இறையாண்மை கொண்ட ஒரு நாடாகும்.

அரசமைப்பின் மூலம் பௌத்த மதத்துக்கு முதன்மை இடம் வழங்கி, அதனைப் போஷித்து பாதுகாக்கும் அதேவேளையில், ஏனைய சமூகங்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துத் தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரணசிங்க பிரேமதாச புத்தசாசன அமைச்சை உருவாக்கியதுடன், ஏனைய மதங்கள் மற்றும் இனங்களுக்காக இராஜாங்க அமைச்சுகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்கினார். இதுவே நாங்களும் பின்பற்றும் நடுத்தரப் பாதையாகும்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் இனவாதமோ மதவாதமோ கிடையாது. காவி உடையில் கை வைப்பதற்கோ அல்லது அது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கோ சாதாரண மக்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. மதத் தலைவர்கள், மகாநாயக்க தேரர்கள், ஒழுக்காற்று சபைகள் மற்றும் சங்க சபைகள் மூலமே இவ்வாறான விடயங்கள் கையாளப்பட வேண்டும்.
சர்வாதிகார ஆட்சி
இந்த அரசு காவி உடையில் கை வைத்து பாரியதொரு தவறைச் செய்துள்ளது. அந்தத் தவறைத் திருத்துவதற்கு அறிக்கையைப் பெற இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

24 மணித்தியாலங்களுக்குள் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது தொடர்பாகக் கலந்துரையாட எதிர்க்கட்சி சார்பில் யோசனைகளை முன்வைத்துள்ளோம்.
காவி உடை மட்டுமன்றி, ஏனைய மதத் தலைவர்களின் உத்தியோகபூர்வ ஆடைகள் குறித்தும் பொதுவான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
இன்று நாட்டில் அரசை மையமாகக் கொண்ட பாரதூரமான அடக்குமுறைக் கொள்கையே காணப்படுகின்றது. எதிர்க்கட்சியை மௌனிக்கச் செய்யும் தர்மத்துக்குப் புறம்பான சர்வாதிகார ஆட்சியொன்றையே அரசு முன்னெடுத்து வருகின்றது.
அரசு தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே முயற்சிக்கிறது. அத்துடன், 22ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்துக்கும், நீதித்துறையின் சுயாதீனத்துக்கும் தற்போதைய அரசு மரண அடியைக் கொடுத்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.