மீண்டும் வரிசை யுகத்தை நோக்கி நகரும் இலங்கை! நாடு முழுவதும் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை உள்நாட்டு சந்தையில் பாரிய எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
நாட்டின் எரிவாயு விநியோகத்தில் 80 முதல் 85 சதவீதமான பங்கினை லிட்ரோ எரிவாயு நிறுவனமும், மிகுதி 15 முதல் 20 சதவீதமான பங்கினை லாவ்ஸ் எரிவாயு நிறுவனமும் கொண்டுள்ளன.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு
இந்த நிலையில் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் 3 வாரங்களாக லாவ்ஸ் எரிவாயுவுக்கும், ஒரு வார காலமாக லிட்ரோ எரிவாயுவுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக விநியோக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த மூன்று வாரங்களாக மொத்த விநியோகங்கள் கிடைக்கப்பெறவில்லை என முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகம் முழுவதிலும் எரிவாயு நெருக்கடி ஒன்று உருவாகியுள்ளதாக லாவ்ஸ் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரிடம் வினவிய போது, கடந்த 2 நாட்களில் எரிவாயு கப்பல்கள் வருகை தருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.
மக்கள் தவிப்பு
எனினும், நேற்று 3,500 மெற்றிக் டன் எரிவாயுவுடனான கப்பலொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த எரிவாயுவை விரைவாக சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்கு ஒரு நாளைக்கு தேவையான எரிவாயுவின் அளவு 1,200 மெற்றிக் டன்களாகும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வரும். எதிர்வரும் நாட்களில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள எரிவாயு நாட்டை வந்தடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாவ்ஸ் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக, நுகர்வோர் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளமையும் சடுதியான தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாக அடைந்துள்ளதாக, லிட்ரோ தலைவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் தேவையின்றி எரிவாயுவை சேமித்து வைக்க வேண்டாம். ஞாயிற்றுக்கிழமைக்கு பின்னர் தட்டுப்பாடு நீங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.