சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம் : ஜனாதிபதி வெளியிட்டுள்ள இணக்கம்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் நாட்டின் அரசியல் சாசனத்தின் பிரகாரம் செயல்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்குகளிடம் இந்த தகவலை பரிமாறியுள்ளார்.
நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் அரசியல் அமைப்பிற்கும் உட்பட்ட வகையில் ஞானசார தேரரை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நினைத்தால் பொது மன்னிப்பு
ஜனாதிபதி இவ்வாறு இணக்கம் வெளியிட்டதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை தங்களுக்கு இந்த பதில் புரியவில்லை எனவும் தாங்கள் ஜனாதிபதி பொது மன்னிப்பை கோருவதாகவும் பௌத்த தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஜனாதிபதி நினைத்தால் இந்த பொது மன்னிப்பினை இலகுவில் வழங்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற காரணத்தினால் பெண்ணை ஆணாகவும் ஆணை பெண்ணாகவும் மாற்றுவதை தவிர எந்த ஒரு விடயத்தையும் செய்யக்கூடிய அதிகாரம் அவருக்கு உண்டு என பௌத்தப்பிக்குகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கால வரையறை பற்றிய தகவல்கள்
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை தெளிவாக கூறுமாறு பௌத்த பிக்குகள் குறித்த அதிகாரிகளையும் கேட்டுக் கொண்டனர்.

கடந்த ஜனாதிபதிகள் பொது மன்னிப்பு வழங்கிய போது உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை எனவும் அந்த விதிமுறைகளுக்கு அமைய பொது மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு காலத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்பதனை உறுதிப்பட கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் பொது மன்னிப்பு எப்போது வழங்கப்படும் என்ற கால வரையறை பற்றிய தகவல்கள் வழங்கப்படாது இந்த உறுதிமொழியை ஏற்றுக்காள்ள முடியாது என பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.
you may like this..