ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நிறைவேற்ற விடமாட்டோம்: அனுரகுமார உறுதி
அண்மையில் வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இடமளிக்கப்போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஊவாகம தொகுதிக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களை ஏமாற்ற முடியாது
அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆகும் போது ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும், ரணிலுக்கு இன்னும் 11 மாதங்களே உள்ளன.
தேசிய அளவில் சிங்கப்பூராக மாற்றுவதாக கூறியும், ஆசியாவின் அதிசயமாக மாற்றுவதாகக் கூறியும் மக்களை ஏமாற்றினர்.
மக்கள் தற்போது முடியுமான வரை பாடங்களை கற்றுக்கொண்டுள்ளனர். மீண்டும் மக்களை ஏமாற்ற முடியாது.
இவ்வளவு நாட்களும் மறைத்து வைத்திருந்த விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டன.
மக்கள் முன்னிலையில் உண்மை வெளிப்படுவதை நிறுத்தவே இவ்வாறான சட்டமூலங்களை கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
இந்நிலையில், வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றை உடனடியாக விலக்கிக்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த இரண்டு சட்டமூலங்களும் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சட்டவாக்கத்தையும் அதிகளவில் பாதிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |