ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் மீது தாக்குதல்:மசகு எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதை அடுத்து, அதில் இருந்த மாலுமிகள் உள்ளூர் அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சவூதி அரேபியாவின் பிரதான கச்சா எண்ணெய் குழாய்த்தொடர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு மூடப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய ஆற்றல் விநியோகம் குறித்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
சவூதி அரேபியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் 1,200 கிலோமீற்றர் நீளமுடைய இந்த எண்ணெய் குழாய்த்தொடர், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்த காலத்தில் நாட்டின் 5 சதவீதமான எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கிய வழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.தற்போது இத்தாக்குதல் காரணமாகப் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் நிலவுகின்றது.

அதேவேளை, யேமனின் செங்கடல் பிராந்தியத்தில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக அமெரிக்காவின் இராணுவ உதவியைச் சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை
எனினும், நேரடி இராணுவத் தலையீட்டைத் தவிர்த்து உளவுத்துறைத் தகவல்களை வழங்க மாத்திரமே அமெரிக்கா உடன்பட்டுள்ளது. நாளை ஓமானில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகளின் கூட்டத்தில் ஹோர்முஸ் நீரிணையின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணை அமைதியைத் திரும்பப் பெற ஈரான் விதித்துள்ள 7 நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை சுமுகமான உடன்பாடு எட்டப்படுவது கடினம் எனப் பிராந்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.