பிரித்தானிய பிரதமர் தேர்தல் - ரிஷி சுனக்குக்கு மேலும் ஒரு பின்னடைவு
பிரித்தானிய பிரதமர் தேர்தலில் முக்கிய நபர் ஒருவர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தனது ஆதரவையளித்துள்ளதைத் தொடர்ந்து போட்டியிலிருக்கும் மற்றொரு வேட்பாளரான ரிஷி சுனக்குக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தின்போது, பிரித்தானிய மகாராணியார் முதல் பொதுமக்கள் வரை பொதுமுடக்கம் என்ற பெயரில் அவரவர் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்க, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வீட்டிலோ தொடர்ச்சியாக மதுபான பார்ட்டிகள் நடந்தன.
இந்த விடயம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகி நாட்டையே குலுங்க வைத்தது.
மேலும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு போரிஸ் ஜான்சன் பதவி உயர்வு அளித்த ஒரு விடயமும் பத்திரிகைகளில் வெளியாக, போரிஸ் ஜான்சனுக்கு கெட்ட நேரம் துவங்கியது எனலாம்.
அதைத் தொடர்ந்து சுகாதாரச் செயலர் சாஜித் ஜாவித் தான் ராஜினாமா செய்வதாக அறிவிக்க, ஒன்பதே நிமிடங்களுக்குப் பிறகு ரிஷி சுனக்கும் ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து வரிசையாக ராஜினாமாக்கள், போரிஸ் ஜான்சனும் ராஜினாமா செய்யவேண்டிய ஒரு கட்டாயம்! பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்பது போல, போரிஸ் ஜான்சனுடைய தவறுகள் அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைய, அவரது ஆதரவாளர்களோ, ரிஷி அவரது முதுகில் குத்திவிட்டார் என்ற தோரணையில் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில், பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் தொடர்ந்து முன்னணி வகித்துவந்த ரிஷி, இப்போது பின்தங்குவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடத் துவங்கியுள்ளன. ரிஷியே, கருத்துக்கணிப்புகள் நான் போட்டியில் பின் தங்குவதாக கூறியுள்ளது எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான பென் வாலேஸ், வெளிப்படையாக, தான் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
லிஸ் உண்மையானவர் மற்றும் நேர்மையானவர் என்று கூறியுள்ள வாலேஸ், நான் கேபினட்டிலும், இருதரப்பு கூட்டங்கள் மற்றும் சர்வதேச உச்சி மாநாடுகளிலும் லிஸ் ட்ரஸ்ஸுடன் இருந்திருக்கிறேன், அவர் உறுதியானவர், உண்மையானவர், ஆகவேதான் அவருக்கு நான் ஆதரவளிக்கிறேன் என்று கூறியுள்ளதுடன், போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்வதற்கு காரணமாக இருந்ததாக ரிஷி மீது குற்றமும் சாட்டியுள்ளார்.
பென் வாலேஸ், லிஸ் ட்ரஸ்ஸுக்கு ஆதரவளித்துள்ளது, ரிஷிக்கு பிரதமர் தேர்தலில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.