டிட்வா புயல் உருவாகிய பாதையில் உருவாகவிருக்கும் புதிய காற்றுச் சுழற்சி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாளை மறு தினம் (28.12.2025) அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் பதிவிட்டுள்ள பதிவில்,
காற்றுச் சுழற்சி
இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 31.12.2025 அன்று இரவு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலுக்கு கிழக்காக 171 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு, பின்னர் இலங்கையின் தென்கிழக்கு கரையை அண்மித்து, அதன் பின்னர் இலங்கையின் தெற்கு கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 06.01.2026 அன்று குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், டிட்வா புயலின் உருவாக்கத்துக்கு காரணமாக விளங்கிய காற்றுச் சுழற்சி ஆரம்பத்தில் இலங்கையின் தென்கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசை நோக்கி எந்தப் பாதையினால் நகர்ந்ததோ அதே பாதையிலேயே உருவாகவிருக்கும் காற்றுச் சுழற்சியும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அந்த காற்றுச் சுழற்சி மேற்கிலிருந்து பின் மீளக் கிழக்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கு மாறாத துன்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது அவ்வாறு அமையாது. இதனால் எதிர்வரும் 28.12.2025 முதல் 06.01.2026 வரை நாடு முழுவதும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பல நாட்கள் மழை
குறிப்பாக வடக்கு,கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்கள் எதிர்வரும் 28.12.2025 முதல் மழை பெறத் தொடங்கும். வடமத்திய, தென், சப்ரகமுவ, மேற்கு, வடமேல் மாகாணங்கள் எதிர்வரும் 29.12.2025 முதல் மழை பெறத் தொடங்கும். எதிர்வரும் 30.12.2025 முதல் 03.01. 2026 வரை நாடு முழுவதும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு, கிழக்கு,மத்திய, ஊவா, வட மத்திய மாகாணங்களுக்கு தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு அவ்வப்போது மழை கிடைக்கும் என்பதனால் குளங்களின் தற்போதைய நீரின் அளவை முன்கூட்டியே சற்று குறைந்து நீர் அளவை முழு வழங்கல் அளவில்( Full Supply Level- FSL) பேணமால் சற்று குறைவாக பேணுவது சிறந்தது.
ஏனென்றால் இந்த சுற்றில் எதிர்பார்க்கும் மழை கிடைக்காது குளங்கள் முழுக் கொள்ளளவை அடையாது விட்டாலும் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தின் இறுதியில் கிடைக்கும் மழை முழுக் கொள்ளளவை பூர்த்தி செய்யும். அத்துடன் ஜனவரி மாதத்தின் இறுதி வரை பல நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகுறைந்த வெப்பநிலை
1. மத்திய, ஊவா, சபரகமுவா மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 29.12.2025 முதல் பரவலாக மழை கிடைக்க தொடங்கி எதிர்வரும் 04.01.2026 வரை மழை தொடர்ச்சியாக அவ்வப்போது கிடைக்கும் என்பதனாலும்,
2. காற்றுச் சுழற்சி இலங்கையின் தென்கிழக்கு பகுதியை அண்மித்து தென்பகுதியூடாக நகரும் என்பதனாலும்,
3. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நாளின் அதிகுறைந்த வெப்பநிலை 9°C க்கு குறைவாக பதிவாகி வருவதாலும் (இலங்கையின் ஒரு நாளின் அதிகுறைந்த வெப்பநிலை 1914 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08ம் திகதி நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.

அளவு -2.7°C) 4. இம் மாகாணங்களின் பல பகுதிகளிலும் குறைந்த வெப்பநிலை மற்றும் தொடர்புடைய மழை காரணமாக மண்ணீரக் கொள்ளளவு (Volumetric Water Content (VWC). 76- 93% என்ற அளவிலேயே உள்ளதனாலும் எதிர்வரும் 29.12.2025 முதல் 04.01.2026 வரை மத்திய, ஊவா மற்றும் சபரகமுவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தத்துக்கான சாத்தியங்கள் உள்ளன.
அத்தோடு தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனாலும், ஏற்கெனவே பல குளங்கள் கிட்டத்தட்ட முழுக் கொள்ளளவோடு உள்ளமையாலும் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நிகழ்வுகள் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை இந்த காற்றுச் சுழற்சி காரணமாக எதிர்வரும் 31.12.2025 முதல் கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.