பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ்: அருட்தந்தை மா.சத்திவேல்
பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
''தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள் அடுத்த வேளை உணவிற்கே கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைத் தனது நரி நாடகத்தில் சிக்க வைக்கும் முயற்சியாகவே ஒரு லட்சம் ரூபா கொடுப்பதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வறுமை நிலையைப் பயன்படுத்தி மரணச் சான்றிதழ் அல்லது காணாமல் போனதற்கான சான்றிதழைக் கொடுத்து போராட்டத்தைச் சிதைக்கவும் அமைப்புக்குள் கருத்து மோதலை உருவாக்கவும் ஆட்சியாளர்கள் காய் நகர்த்துகின்றனர்.
இறப்பு சான்றிதழும் இழப்பீட்டுத் தொகையும் காணாமல் போனதாகக் கூறப்படும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்குச் சிலவேளை மகிழ்ச்சியைத் தரலாம். புது வருடத்திற்கான உதவித் தொகையாகவும் அமையலாம்.
ஆனால் வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது உறவுகளைத் தேடி 2009ஆம் ஆண்டு, அதைத்தொடர்ந்து நீண்ட போராட்டம் நடத்தியதோடு தற்போது ஐந்து வருடங்களைக் கடந்தும் தொடர் போராட்டம் நடத்துவது அரசு அறிவிக்கும் ஒரு லட்ச ரூபா பிச்சை பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அல்ல.
தமிழ் உயிருக்கு உயிரான உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் அதற்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்குமாகும். இதனை கொச்சைப்படுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
இதற்குக் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளே "நாங்கள் உங்களுக்குப் பணம் தருகிறோம் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்" என்று பதிலடி கொடுத்துள்ளனர்.
நாட்டின் சுதந்திர தினத்தைக் கரி நாளாகவும், சர்வதேச பெண்கள் தினத்தினையும் அவ்வாறே அறிவித்து சர்வதேசத்தின் நீதிக்கதைகளைத் தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரூபா ஒரு லட்சம் தருகிறோம் எனக் கூறுவது போராட்டத்தை அசிங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, நீதிக்காகப் போராடும் ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலுமாகும்.
அரசு ஒடுக்குமுறை இயந்திரத்தினால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கு உயிருக்கு உயிரானவர்கள், அவர்கள் தமிழர் தேசத்தின் வாழ்வு காவலர்கள். இவர்களைத் தேடியே நூற்றுக்கு அதிகமானோர் நோயில் விழுந்து மரணத்தைத் தழுவியுள்ளனர்.
இதுவும் சாட்சியங்களை மறைக்கும் அல்லது
இல்லாதொழிக்கும் அரசின் கொலை எனவே நாம் கருதுகின்றோம். இக்கொலையும்
பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது
காணாமல் போனமைக்கான சான்றிதழ் எனலாம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan