மனிதக் கடத்தல் தொடர்பில் கைதான நபருக்கு விளக்கமறியல்
மனிதக் கடத்தல் தொடர்பில் அவிசாவளை - புவக்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (21.11.2022) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களை ஏமாற்றிய இடைத்தரகர்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், மனித கடத்தல் மற்றும் சமுத்திர குற்றச் செயல்கள் விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரிகளால் நேற்றுமுன் தினம் (19.11.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகப் பெண்களை ஏமாற்றி இடைத்தரகராக குறித்த நபர் செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு பிரச்சினையை எதிர்நோக்கிய
நிலையில் மீண்டும் நாடு திரும்பிய பெண்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.