அசாத் சாலியின் வழக்கில் இருந்து விலகிய மற்றுமொரு நீதியரசர்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் மூன்று நீதியரசர்கள் அமர்வில் அங்கம் வகிக்கும் நீதியரசர் ஒருவர் விலகியதன் காரணமாக மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மனு, நீதியரசர்கள் முர்த்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் முன்னிலையில் ஆராய்வதற்காக இன்று எடுக்கப்பட்டது.
அப்போது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு மீதான விசாரணகைளில் இருந்து விலகிக்கொள்ளவதாக நீதியரசர் நவாஸ் தெரிவித்தார்.
இதனையடுத்து மனு மீதான விசாரணகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை சம்பந்தமாக அசாத் சாலிக்கு எதிராக ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றின் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறினார்.
அந்த வழக்கு சம்பந்தப்பட்ட குற்றப்பத்திரிகை உயர் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திலீப பெரேரா குறிப்பிட்டார்.
எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும், தன்னை அந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யுமாறும் கோரி, அசாத் சாலி இந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.