வரவு செலவுத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல்:எதிர்க்கட்சி ஆரூடம் (VIDEO)
அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்,எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம், ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் இறுதி பாதீடாகவே அமையுமென எதிர்கட்சியினர் ஆரூடம் கூறியுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யூடியுப் தளத்தின் ஊடாக காணொளி ஒன்றை வெளியிட்டு வரவு செலவுத் திட்டம் குறித்து தமது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
முற்போக்கான வரவு செலவுத்திட்டம் ஒன்றையே நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோதிலும், அது வெறுமனான ஒன்றாகவே காணப்படுகின்றது. மக்கள் எதிர்ப்பார்த்ததைப் போன்று மக்கள் நேய வரவு செலவுத்திட்டத்திற்குப் பதிலாக பிற்போக்கான ஒரு புஸ்வாணமே கிடைத்துள்ளது.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு திட்டமிடலும் இல்லை. வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான எந்தவொரு திட்டமும் காணப்படவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினைக் குறைப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் இல்லை.
மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களும் இல்லை. விவசாயியை வலுவூட்டுகின்ற வழிமுறைகளும் காணப்படவில்லை. வருமான மார்க்கங்களை உருவாக்கும் வழிமுறையும் காணப்படவில்லை.
சுருக்கமாகக் கூறுவதானால் இந்த வரவு செலவுத்திட்டம், சோமாலியா பாணியிலான மக்களை ஏமாற்றும் ஒரு வரவு செலவுத்திட்டமாகும். குறுகியகால, மத்தியகால, நீண்டகால வேலைத்திட்டங்களற்ற வெற்று ஆவணமாகும்.
அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அரசாங்க ஊழியர்களுக்கும், தனியார்த்துறை ஊழியர்களுக்கும் எந்தவொரு சம்பள அதிகரிப்பும் முன்மொழியப்படாத ஒரு வரவு செலவுத்திட்டமாகும்.
ஹேசா விதானகே
இந்த நாடு தொடர்பில் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதை இந்த பட்ஜெட் தெளிவுபடுத்தியுள்ளது. மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.
விசேடமாக கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்து செய்த பிழையை திருத்திக்கொள்வதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டி தருணம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
நளின் பண்டார
திறைசேரியை பூச்சியமாக்கப்போவதை நிதியமைச்சரே ஏற்றுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் மக்களிடம் அசாதாரண முறையில் வரியை அறவிட்டு அரசாங்கத்தை கொண்டு நடத்த எதிர்ப்பார்கின்றனர்.நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு இந்த பட்ஜெட்டில் பதில் இல்லை.
மனுஷ நாணயக்கார
ஒருசில விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. உதாரணமாக நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கான ஒய்வூதியம் போன்ற விடயங்களை வரவேற்கலாம். எனினும் அதனைத்
தாண்டி எந்தவொரு முக்கிய விடயமும் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.