சவூதி சிறையில் அனோஜன் சிவராசாவைச் சந்தித்த இலங்கைத் தூதுவர்
சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட், அனோஜன் சிவராசாவின் நலம் விசாரித்து, அவரது தற்போதைய நிலையை அறிந்துகொள்வதற்காக, ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தம்மாம் மத்திய சிறையில் அவரைச் சந்தித்துள்ளார்.
இந்தப் பயணத்தின் போது தூதுவர் அமீர் அஜ்வாட் அனோஜன் சிவராசாவுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி, அவரது தேவைகளையும் கவலைகளையும் கேட்டறிந்து, இலங்கையின் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், சாத்தியமான அனைத்து தூதரக மற்றும் சட்டரீதியான உதவிகளையும் வழங்குவதில் தூதரகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அனோஜன் சிவராசாவின் உடல்நலம்
நேரடித் தொடர்பை எளிதாக்கும் வகையில், சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவர் தனது தொடர்பு விவரங்களையும் அனோஜன் சிவராசாவுக்கு வழங்கினார் என ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பைத் தொடர்ந்து, அனோஜன் சிவராசா நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சவூதி சிறை அதிகாரிகள் அவரது நலனைக் கவனித்து வருவதாகவும் தூதுவர் அமீர் அஜ்வாத் உறுதிப்படுத்தினார்.
தம்மாம் மத்திய சிறைச்சாலையின் இயக்குனர் மற்றும் சிறைச்சாலையின் மருத்துவ அதிகாரி ஆகியோரை அஜ்வாத் சந்தித்துள்ளார்.
மேலும், இந்த சந்திப்பிற்கு வசதி செய்து தந்த ஒத்துழைப்பிற்கும், அனோஜன் சிவராசாவின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட கவனிப்பு மற்றும் அக்கறைக்கும் அவர் தனது பாராட்டைத் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.