அனோஜனுக்காகக் குரல் கொடுத்த சனத் ஜெயசூரிய! சவூதியிடம் விடுத்த உருக்கமான கோரிக்கை
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜெயசூரிய, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது சமூக வலைத்தளப் பதிவில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ள அவர், மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாழ்மையுடன் வேண்டுகோள்
மேலும், சவூதி அரேபியா இராச்சியம் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குவது குறித்து கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் பதிவில் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு ஆகியோரையும் சனத் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
சிவராசா அனோஜனின் விடுதலைக்காகப் பல்வேறு தரப்பினரும் மன்னிப்புக் கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரின் இந்த வேண்டுகோளும் கவனம் பெற்றுள்ளது.
இதேவேளை, அனோஜனின் வழக்கு தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.