அனோஜன் விவகாரம்! ஜப்பான் தூதுவரிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் மனு கையளிப்பு
சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரத்தில் துரித இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவிடம் யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் விசேட மனு ஒன்றைக் கையளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதுவரை, யாழ். மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் நேரில் சந்தித்துக் கலந்தரையாடியபோதே இம்மனு கையளிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, சவூதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் மரண தண்டனை அச்சுறுத்தல் குறித்துச் சர்வதேச இராஜதந்திர வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பாகத் தானாக வெளியிட்ட ஊடக அறிக்கையின் முக்கிய அம்சங்களை மாநகரசபை உறுப்பினர் தூதுவரிடம் சுட்டிக்காட்டினார்.
மனு கையளிப்பு
அத்துடன், அனோஜனின் உயிரைக் காப்பாற்ற யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கும் அசைக்க முடியாத வலியுறுத்தல் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய ஊடக அறிக்கை பிரதி உள்ளிட்ட மனுவையும் அவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

மாநகரசபை உறுப்பினரின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டறிந்த ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா, இவ்விவகாரம் தொடர்பில் தனது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார். அத்துடன், ஜப்பான் தூதரகம் ஊடாக இது குறித்து உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிப்பதாக உறுதியளித்ததுடன், தமிழ் இளைஞனொருவனின் உயிரைக் காக்க யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகம் முன்வந்துள்ள இத்தகைய மனிதாபிமான வலியுறுத்தலையும் பாராட்டி வரவேற்றார்.
இச்சந்திப்பின் போது மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ்வுடன், யாழ். முஸ்லிம் இளைஞர் கழகத் தலைவர் செல்வன் எஸ்.எம்.சசானும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan