இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) நாட்டிலுள்ள மனித உரிமை பாதுகாவலர்களை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளின் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்வதற்கு, தற்போது ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், இலங்கையில் உள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை மனித உரிமை ஆணையம் சந்தித்துள்ளது.
எதிர்கால திட்டங்கள்
இதன்போது, சிவில் சமூகப் பிரதிநிதிகள் தமது அனுபவங்கள், கவலைகள் மற்றும் பரிந்துரைகளை ஆணைக்குழுவுடன் பகிர்ந்து கொள்வதற்கும், ஆணைக்குழுவின் தற்போதைய வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் நிறைவேற்றுதல் ஆகியவற்றை வலுப்படுத்துவதில், தம்முடன் நெருக்கமாக பணியாற்றுமாறு சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அழைப்பு விடுத்துள்ளதாகவும், குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.