வாகன இறக்குமதி கட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு
இவ்வாண்டின் ஏப்ரல் மாத இறுதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 178,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (18.05.2026) அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த இறக்குமதித் தொகையினுள் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளிவாரிச் சூழல்களைக் கருத்திற் கொண்டு, வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுங்கத் தீர்வை மீதான 50 சதவீத கூடுதல் கட்டணம் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
2026ஆம் ஆண்டில் இலங்கையில் வாகன இறக்குமதிக்காக அதிகளவிலான அந்நியச் செலாவணி செலவிடப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டில் வாகன இறக்குமதிக்காக முன்னதாகக் கணிக்கப்பட்ட 1.5 பில்லியன் முதல் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிகமாக, தலா 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறான அதிகளவிலான இறக்குமதி காரணமாக, வாகன இறக்குமதி வரி மற்றும் தீர்வுகள் மூலம் திறைசேரிக்குக் கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (முதலாம் காலாண்டில்) மட்டும் வாகன இறக்குமதிக்காக ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
மொத்த வாகன இறக்குமதிச் செலவு
தற்போது நிலவும் இதே போக்கு இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களிலும் தொடருமானால், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்த வாகன இறக்குமதிச் செலவு தோராயமாக 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும்.

இது கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த செலவினத்தையும் விட அதிகமாகும். நிதி அமைச்சானது கடந்த ஆண்டை விடவும் 2026இல் வாகன இறக்குமதி குறையும் என்றே கணித்திருந்தது. எனினும் தற்போதைய தரவுகள் அந்த எதிர்பார்ப்புகளையும் தாண்டி இறக்குமதி அதிகரிக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
இருப்பினும், இந்த வாகன இறக்குமதி அதிகரிப்பானது அரசாங்கத்தின் வருவாய் இலக்குகளில் எந்தவொரு எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறி எதுவும் தற்போது வரை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam