இலங்கை தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி வழங்கவுள்ளதாக உலக விங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார மேம்பாடு குறித்து குறுகிய காலத்திற்குள் அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் திருப்தி அளிப்பதாக உலக வங்கியின் பணிப்பாளர் சியோ காந்தா தெரிவித்துள்ளார்
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடனான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிதி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்தி, கடன் மறுசீரமைப்பு திட்டம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கடன் தொகையான 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறும் என நம்புவதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
பொருளாதார நிலைமையை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள குறுகிய கால நடவடிக்கைகள் குறித்து உலக வங்கியின் பணிப்பாளர் திருப்தி வெளியிட்டுள்ளார். இடைக்கால மற்றும் நீண்ட கால முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவதாகவும் உறுதியளித்தார்.