டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணயின் இறுதியில் உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று (08) வழங்கியுள்ளது.
கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி விசாரணையை முடித்த நீதியரசர்கள் அமர்வு அதன் தீர்ப்பை காலவரையின்றி ஒத்திவைத்தது.
எனினும், இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாம் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட இரண்டு வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை முன்வைத்திருந்தார்.
டயானா கமகே மற்றும் பலரை தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ள ஓசல ஹேரத், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரியிருந்தார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் (Diana Gamage) நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பானது வழங்கப்படவுள்ளது.
குறித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (08.05.2024) அறிவிக்கவுள்ளது.
முன்னதாக இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற ஆசனத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்திருந்தது.
வீசா மோசடியை அம்பலப்படுத்திய இளைஞருக்கு நெருக்கடி கொடுத்தால் போராட்டம் வெடிக்கும்: ஜே.வி.பி. எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்புரிமை
இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பிலேயே இன்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பிரித்தானிய நாட்டவராக இருந்து கொண்டு இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டே டயானா கமகேக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இது நிரூபிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |